Skip to main content

அது ஒரு கனாக்காலம்

"ஹையா இன்னைக்கு கடைசிப் பரிச்சை" என்று அன்று சந்தோசமாக பள்ளிக்கு புறப்படுவேன். நானும் என் நண்பன் ராசேந்திரனும் இட்டேரி வழியாக சைக்கிளில் எதிர்"காத்தில்" பெடல்கள் மீது ஏறி..அழுத்தி ... ஓட்டுவோம். எதிர் காற்றில் சைக்கிள் ஓட்டுவது என்பது பிரேக் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு சமம். சோழக்கூட்டோடு எருமைத்தயிரு கலந்து ஆத்தா அன்போடு ஊத்திக்கொடுத்த சாப்பாடு , சைக்கிளின் ஆட்டத்தால், தூக்குப்போசி வாய்வழியாக.. சிந்த ஆரம்பிக்கும்.

சில சமயங்களில் பக்கத்து ஊரு வாத்தியார் எதுக்கால சைக்கிள்ல வருவார். உடனே இறங்கி ஒரு வணக்கம் போட்டு ... அப்படியே... தாவிக்குதித்து... மறுபடியும் அழுத்துவோம்.. சைக்கிளை நிப்பாட்டாமலே!
பரீட்சை முடிந்து மதியம் பள்ளிக்கு பக்கத்துல இருக்குற வயல்வெளிக்கு நண்பர்களோடு செல்வேன். அவரவர் சாப்பாடுகள் காலியானவுடன் கிணற்றில் ஒரு சிறு குளியல். ஒரு அரைமணிநேரம் தண்ணிக்குள்ள தொட்டுவிளயாடுவோம். சில சூரன்கள் இருப்பனுக... நல்லா மூச்சை தம் கட்டிக்கிட்டு .. ஒரு மூணு ஆள் ஆழத்துல போயி மல்லாக்க பாத்தவாரே படுத்துக்கிட்டு "முடிஞ்சா தொடுன்னு" சவால் விடுவானுக. நாங்க அவ்வளவு தூரம் தாக்குபுடிக்க முடியாதா... அதுனால "மகனே நீ எப்படியும் மேலவந்துதேன ஆகனும்னு" மேலேயே கழுகு மாதிரி வட்டம் போட்டு புடிப்போம். அந்த அரமணிநேரத்துலயே கண்ணு எல்லாம்.. சிவப்பா.. மப்பு அடிச்சமாதிரி ஆயிரும். உலகமே ஏதோ மிஸ்ட் எஃபெக்ட் பில்டர் போட்டு பாத்தமாதிரி புகையா தெரியும்.

அதுக்கப்புறம் பக்கத்துல இருக்குற சண்முகா தியேட்டர் போவோம். அங்க சகலகலாவல்லவன் படம்னு ஞாபகம். அதுல 50 பைசா தரைடிக்கட் வாங்கி படம் பார்ப்போம். படம் முடிஞ்சதும் மீண்டும் சைக்கிள் பயணம். வர்ரவழியில அங்கங்க சைக்கில நிப்பாட்டி, வேலிக்கு ஓடுவோம். அப்படி ஓடினா ஒன்னு செவப்பா கோவப்பழம்.. அல்லது இலந்தப்பழமரம்.. கண்ணுல தட்டுப்பட்டிருக்கும். அதைப்புடிங்கி சாப்பிட்டுவிட்டு நேரா தோட்டத்து சாலைக்குப்போய் நிப்பாட்டுவேன்.

ஸ்டேண்டு போட்டு முடிக்கும் முன்பே நாலுகால் பாய்ச்சலில் ஓடிவருவான் "மணி". எங்க வெள்ளைநாய். டவுனுல ஜிம்மி டாமின்னு பேர் வக்கிற மாதிரி எங்க கிராமங்களில் மணி, வெள்ளையன், செவலையன் போன்ற பெயர்களே நாய்களுக்கு பிரசித்தமானவை. அது என்னைபார்த்த சந்தோசத்துல தொத்துக்கால் போட்டு ... மூஞ்சிய நாக்கால் நக்கி ... மனுசங்கள விட நண்பர்களை வரவேற்பதில் தாங்கள் தான் இணையற்றவர்கள் என்று நீரூபிக்கும்.
பின், "ஆத்தா வந்துட்டேன்" என்று கத்தியவாறே சாலையின் உள்ளே நுழைந்தால் ஆத்தா "பேரன் வருவானே" என்று கடலையை அல்லது நரிப்பயிறை வறுத்துக்கொண்டு இருக்கும். அதோடு கொஞ்சம் வெள்ளம் சேர்த்து சாப்பிட்டுவிட்டு ஒரு சொம்புத்தண்ணி குடிச்சுட்டு ஸ்கூல் யூனிபார்மில் சட்டைக்கு மட்டும் விடை கொடுப்பேன்.

டவுசர அண்ணாக்கயித்துல சுத்திக்கிட்டு வெறும் மேலோட பக்கத்து தோட்டத்து பழனிசாமி சாலைக்கு போவேன். அவன் நான் வர்ரதைப்பாத்ததும் உள்ள ஓடிப்போய் அவங்க வீட்டுல இருக்கும் ஹோவர்ட் ரேடியோவை திண்ணைக்கு கொண்டுவருவான். அதுல 6 பாட்டரிக்கட்டை போடுவோம். உடனே பாட ஆரம்பிக்கும். அது இளையபாரதம்னு ஒரு புரோகிராம் நு ஞாபகம். அதைக்கேப்போம். அப்போ டீவீ ன்னா என்னன்னு தெரியாத காலம். ஆப்புறம் பேண்டு மாத்துன்னு போராடி இலங்கை ஒலிபரப்புக்கு மாத்துவோம். அவர்களது பேச்சும் விளம்பரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பின் ஊர்க்கதைகள் பேசுவோம். அதில் பல சிறுமிகள், பேய்கள், ஊருக்கு புதுசா வந்திருக்கிற டிராக்டர் மகாத்மியங்கள் என்று பலசும் அலசப்படும்.

மறுபடியும் சாலைக்கு வரும்பொழுது மணி 9 ஆகியிருக்கும். கம்பஞ்சோறு கூட பண்ணைக்கீரை கடைந்து ஆத்தா பரிமாறியதை சாப்பிட்டுவிட்டு பட்டிக்கு காவலுக்கு போவோம். 3 செல் டார்ச்லைட் அப்புறம் ஒரு வீச்சரிவாள் மற்றும் ஒரு சிறுமூங்கில் தடி போன்றவற்றை எடுத்துக்கொண்டு மணி நாயோடு ஆடுகள் அடைத்துவைக்கப்பட்டுருக்கும் ஆட்டுபட்டிக்கும் தூங்கச் செல்வேன். அன்றைய கனவில் சில்க்ஸ்மிதாவும் கமலும் "நேத்து ராத்திரி எம்மா" பாடிக்கொண்டிருந்தார்கள்!

Comments

Popular posts from this blog

‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :

எனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்தேன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ! மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே ! அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு …

முகநூல் & வலைப்பதிவுகள்

இனிமேல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு மறுபடியும் உறுதியாக வலைப்பதிவுலகில் மறுசென்மம் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை முகநூலில் எழுதினாலும் வகை பிரிக்கவும் வழியில்லாத காலத்தால் அடித்துசெல்லும் நீரின்மீது எழுதிய எழுத்துக்களாக முகநூல் எழுத்துக்களை உணர்வதால் அதனோடு டிஜிட்டல் கல்வெட்டுகளாய் இனிவரும் காலங்களிலும் விளங்க இருக்கும் வலைப்பதிவுகளுக்கு மீண்டும் நுழைகிறேன். எனது வலைப்பூ minimalist chella dot blogspot dot in என்கிற தளத்தில் மினிமலிசம் ஸ்டைலில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறேன்.

விசாரணை , தங்கப்பதக்கம் , வாலடர் வெற்றிவேல் !

ஸ்காட்லாந்து யார்டு போலிஸ்க்கு அப்புறம் நாங்கதான் என்று பெருமை பட்டுக்கொண்ட அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் குடும்பத்தோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் எங்கூரு ஆட்டோ சந்திரன் அண்ணன் எழுதி வெற்றிமாறன் தயாரித்திருக்கும் குரலற்றவர்களின் காவியம் “விசாரணை “ . இன்று நண்பர்கள் சென்றபோது கதாசியரையரையும் தியேட்டரில் சந்தித்திருக்கிறார்கள் ! கோவை எத்தனையோ புரட்சிகளுக்கு சொந்தமான ஊர். அதில் இந்த படமும் ஒன்று ! தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் என்று ஹீரோயிசத்தையும் பொய்முகங்களையும் காசாக்கிப்பார்த்த திரைத்துறை சாதாரண மக்களில் கண்ணீர்கதையை, கானகக் குரலை முதன்முறையாக ஆணித்தரமாக காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம் மூலம் ! நன்றி வெற்றிமாறன் & எங்கூரு சந்திரன் அண்ணன். உங்களிருவருக்கும் ஆயிரம் அவார்டுகள் மானசீகமாக கிடைக்கும் இப்படத்தின் மூலம்.
தனுஷ்.. நன்றி உங்களுக்கும் தான் !
பின்குறிப்பு: பல்வேறு நாடுகளிலும் சென்று படித்த நண்பர் சரவணன் அவர்கள் சொல்லுவார் . . . “செல்லா உலகிலேயே அரசாங்கங்களை விட பெரிய டெரரிஸ்ட்கள் இன்னும் இவ்வுலகில் உருவாகவில்லை என்று”.. அது எவ்வளவு நிசம் என்பதற்க…